சாப விமோசனம்என்ன சாபம்?
என்ன விமோசனம்??


வலை பூவா, பதிவா, குறிப்பா, கிறுக்கலா, வேற ஏதேனும் எழவா என்பதில் ஆரம்பித்து அரசாங்க மதுக்கடையில் குறைந்தபட்ச விற்பனை அளவு குவார்ட்டர் தான், கட்டிங் எல்லாம் கிடையாது என்பது வரைக்கும் தமிழனுக்குத் தான் எத்தனை சாபங்கள்.. அதற்கெல்லாம் விமோசனமாகத் தான் இந்த வலைத்துளி அல்லது வலைமழை அல்லது வலைக்கருமம்..!!


   

<< July 2020 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04
05 06 07 08 09 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:

Jan 29, 2004
அம்மாவும் நீயே.. எல்லாமும் நீயே..!!

எதிர்பார்த்தபடி பாரதீய ஜனதாவின் முழுச் சரணாகதி, அம்மா பாதங்களில். அதிமுக-வுக்குக் கவலையில்லை. பிஜேபி-யெல்லாம் கொடுப்பதைப் பக்குவ மனதோடு வாங்கிக் கொள்ளும் பண்பாட்டினை அறிந்த, உணர்ந்த கட்சி.

எதிர்ப்பக்கம் தான் குழப்பமெல்லாம்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான். - அவன்
யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை
எல்லோருக்கும் பிரிச்சுக் கொடுத்தான்


என்று தொகுதிப் பாகுபாடு படாத பாடு படுகிறது. சுமுகத் தீர்மானம் ஏற்பட இறைவனை வேண்டிக் கொள்வோம். இல்லை இல்லை, இப்போ தான் திமுக காவிக் கமண்டலத்திலிருந்து அணி மாறிப் பகுத்தறிவுக் குட்டைக்கே திரும்பி வந்து விட்டதே.. இறைவனையெல்லாம் வேண்டித் தொலைக்காதீர்கள்.. கலைஞர் கோபித்துக் கொள்வார்..!!

Posted at 11:37 am by புதுமை விரும்பும் பித்தன்
Comments (4) [romanised Tamil only]

Dec 29, 2003
"உனக்கு 20, எனக்கு 20" காங்கிரஸ் - திமுக கூட்டு?

ஆகக்கூடி தமிழக தே"சீ"ய சனநாயகக் கூட்டணிக் கப்பல் கவுந்துடுச்சு.. பெரியார் சீடர்கள் ராமாயணம் பாராயணம் பண்ற கட்சியோட எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்..?? கலைஞர் அன்னிக்கே ஒட்டுமில்ல ஒறவுமில்ல-ன்னு சொன்னாரு.. ஆனாலும் இத்தனை நாள் ஒட்டிக்கிட்டு இருந்தாரு.. பழியைத் தூக்கி தமிழக பாஜக மேல போட்டுட்டு கிளப்பிட்டாரு கூடாரம்.. மதிமுகவும் பின் தொடர்ந்து போயிடுச்சு.. பாவம் செஞ்சியாரு.. அவரு ரெண்டாவது தபா மந்திரியாகி கொஞ்ச நாளில கூட்டணிக்கு கோவிந்தாப் போட்டுட்டாங்க.. பாமக மட்டும் "உறவுப்பாலமாக இருப்போம்"-னு சொல்லி கூடணியிலே நங்கூரம் பாய்ச்சிட்டாங்க.. டாக்டர் அய்யா கூட்டிக் கழிச்சு நல்லா சீட்டுக் கணக்குப் போடுவாரு.. தேர்தல் நேரத்தில அவர் கணக்கு தெரிஞ்சுடும்..

திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் அடுத்தாப்பில வரும் போல இருக்கு.. "இந்திராவின் மருமகளே வருக.. இனிய ஆட்சி தருக.."-ன்னு கலைஞர் கோஷமெல்லாம் ரெடி பண்ணி தூள் கிளப்பிடுவாரு.. காங்கிரஸ் இருபது சீட்டு கேட்கும்.. மதிமுக-வுக்கும் கொஞ்சம் அழணும்.. கலைஞர் இதயத்தில மட்டும் இடம் கொடுக்கிற மாதிரி கட்சியெல்லாம் எதுவும் வராது.. கலைஞர் எப்படி சமாளிக்கிறார்-னு பார்ப்போம்..

Posted at 04:52 pm by புதுமை விரும்பும் பித்தன்
Comments (2) [romanised Tamil only]

Dec 22, 2003
நான் கோடி காட்டுகிறேன்.. நீங்கள்...

இந்தியாவின் அந்நிய செலாவணிக் கையிருப்பு பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலர்களைக் கடந்தது..
- நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் பெருமிதம்!!


பெருமிதப்பட வேண்டியது தான். கவிஞர்கள் ஏன் சும்மா இருக்கிறார்கள்??

ஆயிரம் உண்டிங்கு கோடி - எனில்
ஏழைகள் பசியால் வெந்து மடிவதென்ன நீதி?

என்று கவிதை எழுதி தங்கள் கோபக் கனலைக் காட்ட வாய்ப்பாக இருக்கிறதே..!!

10,000 கோடி அமெரிக்க டாலர்கள் என்றால் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி இந்திய ரூபாய்கள்.. நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு நிறைய தேவைபடுமென்று சொல்கிறார்களே.. ஏதேனும் தேறுமா என்று முயற்சி செய்து பார்க்கலாம்.. அல்லது அரசியல்வாதிகளுக்கு இருக்கவே இருக்கிறது சாலை மேபாட்டுத் திட்டங்கள்.. வைர அறுகோணத் திட்டம் என்று ஒரு திட்டம் ஆரம்பித்து இன்னும் சில பொறியாளர்களைப் போட்டுத் தள்ள அரியதோர் வாய்ப்பு.. நடக்கட்டும்..!!

Posted at 07:48 pm by புதுமை விரும்பும் பித்தன்
Make a comment [romanised Tamil only]

Dec 21, 2003
இறைவன் என்றொரு சந்தர்ப்பவாதி

"இது இறைவன் விருப்பம்"
- டான்ஸி வழக்கு விடுதலையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா.

"இறைவன் எப்போதும் நக்கீரன் பக்கம் இருப்பான்"
- பொடா வழக்கில் ஜாமீன் கிடைத்தது பற்றி "நக்கீரன்" ஆசிரியர் கோபால்.


இறைவன் இப்படிப் போட்டு குழப்புறாரே.. முடிவா சொல்லுங்க சாமியோவ், அவரு யார் பக்கம்..??

Posted at 04:54 pm by புதுமை விரும்பும் பித்தன்
Make a comment [romanised Tamil only]

Dec 19, 2003
நெஞ்சு பொறுக்குதா பொறுக்குதில்லையா?

தமிழக அரசு சார்பில் வருடா வருடம்
எட்டயபுரத்தில் நடைபெறும் பாரதியார் பிறந்த நாள் விழா
இந்த வருடம் அவர் பிறந்த நாளன்று நடைபெறாமல்
இரண்டு நாட்கள் தள்ளி நடைபெற்றது.
காரணம், அமைச்சர்களின் தேதி கிடைக்காததால்.
- செய்தி.


அம்மா ஐதராபாதிலிருக்கும் போதாவது அமைச்சர்கள் நிம்மதியாய் இங்கு கடமை ஆற்றுவார்கள் என்று யாரேனும் கருதியிருந்தால் அவர்களை அம்மாவின் தாயுள்ளம் கூட மன்னிக்காது. அதெப்படி முடியும்? ஜூனியர் விகடனும் ரிப்போர்ட்டரும், "ஐதராபாதிலிருந்து அம்மா திரும்பியதும் அதிரடி அமைச்சரவை மாற்றம்" என்று ஆரூடம் சொல்லி அவர்களின் வயிற்றில் புளிக்கரைசலைப் பாய்ச்சும்போது பாரதியார் என்றால், "யார் பாரதி?" என்று தான் கேட்பார்கள். (இருந்தாலும் முன்னாள் அமைச்சர் ஆவதற்கு இப்படி பயப்பட வேண்டியதில்லை என்பதே உண்மை. பத்தோடு பதினொன்றாய், மன்னிக்கவும், நூறோடு நூற்றி ஒன்றாய் இருந்து விட்டுப் போக வேன்டியது தானே.. சில பேர் மூன்றாவது தடவையாக முன்னாள் அமைச்சர் ஆகிக் கொன்டிருக்கும் காலம் இது..!! மற்றவர்கள், "வெற்றிகரமான நூறாவது நாள் - அமைச்சராக நான்" என்று போஸ்டர் ஒட்டிக் கொண்டாடாத குறை..!!)

பேசாமல் ஒன்று செய்யலாம். அந்தத் தலைவரின் பிறந்த நாள், இந்தக் கவிஞரின் நினைவு நாள் என்று அமைச்சர்களை அடிக்கடி தொந்தரவு செய்வதற்குப் பதில், "ஒரு மாத சிறப்பு முகாம்" ஒன்றை முதுமலை மாதிரி இடத்தில் ஏற்பாடு செய்து, அங்கே தலைவர்கள், கவிஞர்கள், எல்லோருக்கும் சேர்த்து வைத்து பிறந்த நாள், நினைவு நாள், எல்லாம் வரிசையாகக் கொண்டாடி தூள் கிளப்பி விடலாம். அமைச்சர்களுக்கு நாலு இடத்திற்குப் போய் வந்த வகையில் கொஞ்சம் பொழுதாவது போகும்.

Posted at 11:39 am by புதுமை விரும்பும் பித்தன்
Make a comment [romanised Tamil only]

Dec 18, 2003
கடவுளும் கடைசித் தமிழனும்

கடவுள் என்கிற சமாச்சாரத்துடன் தமிழனுக்குள்ள தொடர்பு அளப்பரியது. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய தமிழர்களும் கூட ஒரு கல்லை நட்டு வைத்து தெய்வமாகத் தொழுதனர்" என்று வாதம் செய்யக் கூடிய ஆராய்ச்சி "மணி"கள் ஆங்காங்கே ஆயிரம் உன்டு. இந்தப் பக்கம் பார்த்தால், "கல்லைப் பார்த்துக் கன்னத்தில் ஏனடா போட்டுக் கொள்கிறாய், உன் செருப்பை எடுத்து அந்தக் கல்லின் கன்னத்தில் போடு" என்று சொல்வதற்கும் ஆட்கள் அநேகம் உன்டு.

சாமி என்றால் என்ன என்று இன்று சிறு பிள்ளைகளைக் கேட்டால், நம்மை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "அவர் போலீஸ் இல்லை, பொறுக்கி..!!" என்று இல்லாத மீசையைத் தடவி விட்டுக் கொண்டே சொல்வார்கள்.

கஷ்டம் வரும்போது கடவுளின் ஞாபகம் வருமென்று ஒரு சொலவடை உன்டு. இந்தக் காலத்தில் கடவுளின் பெயரால் தான் நிறைய கஷ்டங்கள் வருவதால், ஞாபகமும் வந்து தான் ஆக வேண்டியிருக்கிறது.

"காதல் சொன்ன கணமே, அது கடவுளைக் கண்ட கணமே" என்று பாடிப் புல்லரிக்க கடவுள் எவ்வளவு உதவி செய்கிறார் பாருங்கள்..

பண்டிகை என்ற பெயரில் தமிழர்கள் பல்வேறு தின்பண்டங்களை கலந்து கட்டி அடிப்பதற்கும் கடவுள் மிகவும் உறுதுணை செய்கிறார். கொழுக்கட்டை என்ன, கேக் என்ன, முறுக்கு சீடை என்ன, அடேயப்பா. கிராமத்து சாமிகள் மட்டும் குறைந்தவர்களா என்ன? நேர்த்திக்கடன் என்ற பெயரில் அவர்களுக்கும் படையலும், பிரியாணியும் பட்டையைக் கிளப்பும். அண்மைக் காலத் தடை வரும் வரை. இதனாலெல்லாம் வெகுண்டு, "அடப் பாவிகளா.. என் பேரைச் சொல்லி இத்தனை தின்கிறீர்களே, எனக்குக் கொஞ்சமாவது உண்டா.." என்ற கோபத்தில் தான் பிள்ளையார் பால் குடித்த அற்புத லீலைகள் நடந்திருக்கக் கூடும். யாமறியோம் பராபரமே..!!

நமக்குப் புரியாத விஷயங்களெல்லாம் கடவுளின் செயலில் சேர்த்தி என்பது தமிழனின் பரவலான நம்பிக்கை. டான்சி வழக்கில் விடுதலை எப்படிக் கிடைத்தது என்று யாருக்கும் புரியவில்லை. அதனால் அது "கடவுளின் செயல்." அதான் அவர்களே சொன்னார்களே..!!

தமிழனின் பரந்து விரிந்த மனத்தளத்தில் நடிகைகளும் கோவில் கட்டத் தக்க தெய்வமாவதுண்டு. நடிகர்களும் பாலபிஷேகம் செய்யத் தக்க சாமிகளாவதுண்டு.

இப்படியாக தமிழனின் வாழ்வில் எங்கும் நீக்கமற நிறைந்திருகும் கடவுளை சுலபத்தில் துரத்தி விட முடியுமா..?? கஷ்டம் தாம். அப்படி முயற்சிப்பவர்களை கடவுள் காப்பாற்றட்டும்.

Posted at 01:06 pm by புதுமை விரும்பும் பித்தன்
Comments (3) [romanised Tamil only]